Thursday, May 13, 2010



உன் மீதான என் காதல்
கடவுளைப் போன்றது
தொடக்கமும் இல்லை
முடிவும் இல்லை
அது போலவே..
என் மீதான உன் காதலும்' கடவுளை போன்றது
உண்டா ?இல்லையா ?
நீயே சொல்

Sunday, May 9, 2010

பெண் பூட்டும் ஆண் சாவியும்
காதலை திறக்கிறார்கள்

முகநூலில் நண்பர் ராஜ் பிரின்ஸ் எழுதியது
இதுதான் காதலா?
Share
இதுவரை ஒன்றுமில்லாத வெளிகளில் சுற்றித்திருந்த என்னைச்சுற்றி ஒரு நந்தவனம் தோன்றியது எப்படி? திடீரென்று நான் எப்படி அழகான வனாந்தரத்துக்குள் வந்தேன். இத்தனை நாளும் வெறுமையில் உறங்கிய நான் உன்னைக் கண்டபிறகு வார்த்தைகளின் வெள்ளத்தில் மிதந்தேனே அது எப்படி? நீ யார் எனக்கு? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மனம் என்னெவெல்லாமோ செய்கிறதே ஏன்? மனதில் என்னென்னமோ வைத்துக்கொண்டு ஏதேதோ கேட்கிறேன், நீயும் என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு என்னவோ சொல்கிறாய். இருவரும் எப்போது மனதில் உள்ளதை மட்டும் பேசுவோம்? என் அன்பெல்லாம் உனக்குப் புரியுமா என்பதைக் காட்டிலும் நீ எனதன்பை உணர்ந்தால் அதைத் தாங்குவாயா என்றே நினைக்கிறேன். உன் வருகைக்குப் பிறகு என் மனதிற்கு ஒருகோடிச் சிறகுகள் முளைத்தது எப்படி?

நீ யார் எனக்கு,
நீ எனக்கு மகிழ்ச்சியா? துயரமா?
நீதான் என் உயிரா?
நான் வெறும் சொல், நீதான் அர்த்தமா?
நீ என் இறைவன் அளித்த வரமா?
சாத்தான் தந்த சாபமா?
நீதான் இறைவன் எனக்குள் ஊதிய பரிசுத்த ஆவியா?
நீ என் ஆன்மாவின் இரத்தமா?

உனக்கும் எனக்கும் உள்ள பூர்வஜென்ம பந்தம் என்ன? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் உன்னைப் பார்த்தபிறகு அப்படி இருக்குமோ என்று தோன்றுகிறதே ஏன்? நீதான் என் லைலாவா? போன ஜென்மத்தில் நீ கண்ணன் நான் மீராவா? உன் புல்லாங்குழல் இசையை நிறுத்திவிடு, நான் இறந்துவிடுகிறேன்.

உன்னைப் பார்த்தபிறகு எனக்குள் ஏற்படும் விநோதமான மாற்றங்களை உணரும்போது, மாற்றத்தின் வேகத்தை எண்ணி நடுங்குகிறேன். என்னை ஏன் நடுங்க வைக்கிறாய்? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் உள்ளம் ஏன் நேசத்தால் நடுங்குகிறது. உன்னைப் பார்த்தபின் எனக்குள் வார்த்தைகள் பேயாட்டம் போடுகின்றது. நீ பேயா, என்னை எப்போது பிடித்துக் கொண்டாய். என்னை விட்டு எப்போது இறங்குவாய்?

நீ என் மனதின் ஆறாத காயமா?
ஆழமான காதலா?
நீ என் தீராத நோயா?
மனநோய்க்கான மருந்தா?

அய்யஹோ
உன்னை நேசிக்க மட்டும்தான் நான் படைக்கப்பட்டேனா?
உன்னை மட்டும் நேசித்தால் நான் மனிதகுலத்தை நேசித்தவனாய் ஆவேனா?
உன்னை நேசித்ததற்கு மட்டும் எனக்கு சொர்க்கம் கிடைக்குமா?
உன்னை நேசிப்பதே சொர்க்கம்தானா?
உன்னை நேசிப்பதற்காகவே ஒருவன் படைக்கப்பட்டிருந்தால் நீ யார்?
உன்னைக் காண்பதற்காகத்தான் நான் இத்தனை வருடம் காத்திருந்தேனா?

எரிந்து கொண்டிருக்கும் என் இதயத்தில் வாசனையான எரிபொருளை ஊற்றியது நீதானா? நீ யார் நீ மாயமோகினியா? நீ தேவதை வம்சமா? உனக்கு ஜின்களை வசப்படுத்த தெரியுமா? என்னை எப்படி இப்படியாக்கினாய்? எதுவோ இதையெல்லாம் எழுது எழுது என்று சொல்லிக்கொண்டிருக்கிறதே அய்யோ என்ன செய்தாய்? ஒருவேளை நீ என் பரம எதிரியா? எண்ணியெண்ணி ஏங்க வைத்து என்னைக் கொல்லப் போகிறாயா? திருமணம் ஆகிச்சென்றுவிட்ட பழைய காதலியை சிரமப்பட்டு மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதில் எதேச்சையாய் பார்க்க நேரிட்டபோது நிகழும் பூகம்பம் உன்னைப் பார்த்தபோதும் நிகழ்வது ஏன்? நீ என் பழைய காதலியும் அல்லவே, நீ யார்?

ஒருவேளை நான் உன்னைக் காதலிக்கிறேனா?
இருக்கலாம்
நான்
உன்னைக் காதலிக்கிறேன் ஆனால்
திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் ஆனால்
முத்தமிடப் போவதில்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் ஆனால்
தழுவிக்கொள்ளப் போவதில்லை
ஆனாலும் ஏன் காதலிக்கிறேன்
நாம் யார்?

நீயும் நானும் யார்
நானும் நீயும் யார்
உனக்கும் எனக்கும்
எனக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்

நான் உன்னை நேசிக்கிறேனா? பூஜிக்கிறேனா? நீ யார்? எல்லாவற்றையும், எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு மனதுக்குள் நீ முதல் இடத்துக்கு வந்துவிடுவாயோ என்று பயமாக இருக்கிறது. உண்மையைச் சொல் நீ யார் எனக்கு? அடர்ந்த காட்டுக்குள், ஆழ்ந்த இருட்டுக்குள் தனியே சிக்கிக்கொண்டதைப் போல கலக்கமாயிருக்கிறது எனக்கு. யார் நீ? துஷ்டதேவதைகளின் தலைவியா, யார் சொல்லி என்னை வசப்படுத்தினாய்? என்ன செய்தால் உன்னிடமிருந்து விடைபெற முடியும்?

கரைகள் மௌனமாக இருந்தாலும்
அலைகள் விடுவதில்லை
நெஞ்சம் மௌனமாக இருந்தாலும்
நேசம் விடுவதில்லை
நீ மௌனமாய் இருந்தாலும்
நான் விடுவதாயில்லை
சொல், இப்போதே சொல்
உன் முகத்தில் காணும்
தெய்வீகம் உன்னிடத்திலா?
என் கண்களில்தானா?
ஒவ்வொருமுறை உன் திருமுகம்
காணும்பொதும்
எனக்குள் தேவதூதொன்று வருகிறதா?
நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாவா?
இருள்நிறைந்த இதயமா?
உனக்கு அருளாகவா, எச்சரிக்கையாகவா
என் மொழிகள்?

உனக்கு நிஜமாகவே ஏதாவது புரிகிறதா? என் மொழிகளின் சப்தம் மட்டும் உனக்கு விளங்குகிறதா, இல்லை அதன் அக்கறை அதிர்வுகளைக்கூட நீ அறிந்து கொள்கிறாயா? என் நேசத்தின் நீள அகலங்களை நீ அறிகிறாயா? ஏதாவதொன்று உன்னை ஈரப்படுத்துகிறதா? உனக்கான நேசத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும் தெய்வீகத்தூதுவனை கண்களால் மட்டும் காணுகிறாயா? இதயத்தாலும் பார்க்கிறாயா? என்மீதான அன்பைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருக்கும் உன் தயக்கத்தின் காரணம் சுயநலமா? தந்திரமா? நிச்சயமாய் உனக்குள் ஏதோ ஒன்று எனக்கெனவே இருக்கிறது, அது என்ன?

என்னைக் காணும்போது
உன்னிடமிருந்து வரும் ஒளி
என் கண்களைக் கூசச்செய்கிறதே,
ஒருவேளை
நீயே என் கலங்கரை விளக்கமா?
உன்னிடம் நான் அன்பின் பாடம் நடத்துகிறேனா?
என்னை சரிபார்க்கச்சொல்லி ஒப்புவிக்கிறேனா?
வேண்டாம் இந்த விளையாட்டு,
சொல் நீ என் மாணவியா, ஆசிரியையா?
மறைக்காமல் சொல்லிவிடு
நீ மாயமா? உண்மையா?
நீ ஒளியா? இருளா?
நீ காதலா? வெறுப்பா?
அதையெல்லாம் விடு,
நீ நீயா? நானா?

Saturday, May 8, 2010


காதலில்
பெண் துறக்கிறாள் ...
ஆண் திறக்கிறான்